ரஷ்யாவின் அமுர் பகுதியில் 50 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது..
ரஷ்யாவின் தூர கிழக்கில் இன்று சுமார் 50 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் காணாமல் போனது. இந்த நிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கிழக்கு அமுர் பகுதியில் விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விபத்துக்குள்ளான விமானம் An-24 பயணிகள் விமானம் ஆகும்..
சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், சீனாவின் எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது விமானத்தின் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது..
முதற்கட்ட தரவுகளின்படி, விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்ததாக பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் தெரிவித்தார். இந்த பகுதியில் மீட்புப் படையினர் தற்போது மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.. எனினும் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. பயணிகள் விமானத்தின் உடைந்த பாகங்கள், மீட்பு ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இயக்கும் Mi-8 ஹெலிகாப்டர், விமானத்தின் எரியும் உடற்பகுதியைக் கண்டறிந்துள்ளது” என்று ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமான தரையிறங்கும் போது பணியாளர்களின் பிழையே விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
1950களில் உருவாக்கப்பட்ட Antonov An-24, சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து இரண்டிற்கும் ரஷ்யாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : கம்போடியா ராணுவ இலக்கு மீது தாய்லாந்து வான்வழி தாக்குதல்.. இரு நாட்டு எல்லையில் பதட்டம்..!!