ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தால் ஆன்மிகத் தலைநகரமாக திகழும் மதுரையில், பொதுமக்களுக்கு பெரிதாக தெரியாத ஒரு மர்ம தலம் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலின் நிழலில் அமைந்துள்ள இந்தத் தலம் பாதாள குபேர பைரவர் சன்னதி மதுரையின் ஆன்மிக வரலாற்றில் ஒரு தனிப் பதிவாக திகழ்கிறது.
சாதாரணமாகத் தோன்றும் சிறிய சன்னதி என்றாலும், அதன் முக்கியத்துவம் ஆழத்தில் உள்ளது. நேராகப் பார்க்கும் போது கூட உள்புறத்தில் தெய்வம் இருப்பதை உணர முடியாத அளவுக்கு, பாதாள ஆழத்தில் அமைந்த இந்த பைரவர் சன்னதி, பக்தர்களில் மர்ம உணர்வை உருவாக்குகிறது. இந்த கோவிலின் மிகப் பெரிய சிறப்பு ஒரு நாளில் ராகு காலத்தில் மட்டும் ஒரு மணி நேரம் தான் திறக்கப்படும் என்பதே.
மதுரையின் பிஸியான தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அலைமோதினாலும், அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் இந்த சன்னதி உயிர்ப்பெடுப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். பைரவர் வழிபாடு சக்தி வழிபாட்டின் உயர்ந்த பரிமாணமாக கருதப்படுகிறது. பணநிறைவு, தொழில் முன்னேற்றம், குடும்ப நல்லிணக்கம், திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு பல்வேறு வேண்டுதல்களுடன் தினமும் பக்தர்கள் இந்த பாதாள தலத்தைத் தேடி வருகின்றனர்.
மதுரையில், “மீனாட்சி அம்மனைப் பார்த்தாலும், குபேர பைரவரை தவறாமல் பார்க்க வேண்டும்” என்ற நம்பிக்கை காரணம் இதுவே. ராகு காலத்தை மட்டுமே வழிபாட்டிற்கென நிர்ணயித்து வந்த மரபு, தென்னிந்திய ஆன்மிகத்தின் தனித்துவத்தையும், முன்னோர்களின் ஆழமான ஆன்மிக அறிவையும் வெளிப்படுத்துகிறது.



