தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்காக வைத்து பணியாற்றி வரும் விஜய்க்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை தொடங்கியதில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முக்கிய மாநாடுகளை நடத்தியுள்ளார். இதற்கு இடையே நடந்த 2024 மக்களவை தேர்தலிலும், ஈரோடு இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடவில்லை. மேலும், மாநாடுகளில் அரசியல் கொள்கைகள் தொடர்பாக தெளிவான கருத்துகளை விஜய் இதுவரை முன்வைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டியே இருக்கும் என அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இந்த சூழலில் தான், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், தவெக தலைவர் விஜய்க்கு தனது முழு ஆதரவையும் கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தனது கட்சி நிகழ்ச்சியில் விஜய்யின் தவெக கொடியை கையில் ஏந்தியும், தவெக துண்டை தோளில் போட்டுக் கொண்டும் மேடையில் தோன்றிது போல் ஒரு வீடியோ பரவி வருகிறது.
ஆனால், அவர் கையில் ஏந்தியிருப்பது தவெக கொடி போல் இருக்கும் கர்நாடக மாநில அரசின் கொடியைத்தான். ஜனசேனா கொடியுடன் கர்நாடக மாநில கொடியைத்தான் பவன் கல்யாண் பிடித்திருக்கிறார். அதேபோல், தனது தோளில் துண்டு அணிந்துள்ளார். அப்போது, ஜனசேனா ஒரு நாள் தேசிய கட்சியாக மாறும் என்று பவன் கல்யாண் கூறினார். ஆனால், இதை சிலர் தவெக கொடி என்று கூறி வருகின்றனர்.