ஆப்பிரிக்காவின் பாலைவனப் பகுதிகளில் குடிநீர் ஒரு கனவாகவே உள்ளது. இத்தகைய சவாலான சூழலில், நமீபியாவின் வடகிழக்குப் பகுதியில் வாழும் ஹிம்பா பழங்குடியினர் இன்று வரை தங்கள் தனித்துவமான வாழ்க்கை முறையைத் தொடர்கிறார்கள். “ஓவாஹிம்பா” என தங்களை அழைக்கும் இவர்களின் வாழ்வு, உலகெங்கும் மனிதவள ஆய்வாளர்களை ஈர்த்து வருகிறது.
பெரும்பாலான ஹிம்பா மக்கள் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்து வருகின்றனர். மேலும் கைவினைப் பொருட்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்நியர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் அன்புடன், மரியாதையுடன் நடந்து கொள்வது இவர்களின் சிறப்பம்சம். ஆனால், உலகையே ஆச்சரியப்படுத்தும் இவர்களின் தனித்துவம் சுகாதார முறைகளில் தான் வெளிப்படுகிறது.
இவர்கள் தண்ணீரைக் கொண்டு ஒருபோதும் குளிப்பதில்லை. கடுமையான வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கிடைக்கும் நீரை குடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். குளிப்பதற்குப் பதிலாக, குழி தோண்டி மூலிகைகளை எரித்து, புகையில் தங்களை போர்வையால் மூடி நிற்கிறார்கள். இதனால் வரும் வியர்வை வழியே உடலைச் சுத்தம் செய்கின்றனர். இது அவர்களின் இயற்கை சார்ந்த சுகாதார வழக்கமாக அமைந்துள்ளது.
இணையம், தொழில்நுட்பம், நகர வாழ்க்கை எல்லாம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், ஹிம்பா மக்கள் இன்னும் இயற்கை மையமிட்ட வாழ்வைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடல் அழகு, பாரம்பரிய ஆடை, முக அலங்காரம், தனித்துவமான வாழ்க்கைமுறை இவை அனைத்தும் நவீன மனிதனை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இன்று நவீன உலகம் வசதிகளில் மூழ்கிக் கிடக்கையில் ஹிம்பா மக்களின் இயற்கைநிலை சார்ந்த வாழ்க்கை விசித்திரமானதாக உள்ளது. மனிதவள ஆய்வாளர்கள், மானுடவியலாளர்கள் ஆகியோர் உலகளவில் பெரிதும் ஆர்வமுடன் இவர்களது வாழ்க்கைமுறை, ஆடை, சுகாதாரக் கையாளும் விதி உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
Read more: டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்? அவருடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்..