தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் உயர தொடங்கியுள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலின் தாக்கம் கணிசமாக அதிகரித்திருப்பதை அடுத்து தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் 3 முக்கிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..?
டெங்கு காய்ச்சலின் தீவிர பரவல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், சென்னையில் 12,264 காய்ச்சல் பாதிப்புகளில் 3,665 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 9,367 காய்ச்சல் பாதிப்புகளில் 1,171 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 7,998 காய்ச்சல் பாதிப்புகளில் 1,278 பேருக்கு டெங்கு உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வு காரணமாகவே பொது சுகாதாரத்துறை இந்த 3 மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
டெங்கு அறிகுறிகள் :
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, டெங்கு பாதித்தோருக்கு அதிக காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதியில் வலி, தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி, சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும். இரண்டாவது முறை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு நிலைமை இன்னும் தீவிரமாகி வயிற்று வலி, அதிக தாகம், மயக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற ஆபத்தான அறிகுறிகள் தோன்றலாம்.



