தனியார் நிறுவன முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘நைட்ரோபியூரன்ஸ்’ (Nitrofurans) எனும் ரசாயன மூலக்கூறுகள் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முட்டைகளின் தரத்தைப் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) இந்த அதிரடி நடவடிக்கை, முட்டை உற்பத்தியின் மையமான நாமக்கல் மாவட்டத்திலும் எதிரொலித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பொதுமக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கவும், முட்டைகளின் தரத்தை உறுதிப்படுத்தவும் நாமக்கல்லில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் சிங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பண்ணைகளிலிருந்து முட்டை மாதிரிகளைச் சேகரிப்பது மற்றும் அவற்றை ஆய்வகங்களுக்கு அனுப்பிப் பரிசோதிப்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ணையாளர் சங்க தலைவர் சிங்கராஜ், “நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் எந்தவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு சில தனிப்பட்ட நிறுவனங்கள் மீதான புகார்களை ஒட்டுமொத்த உற்பத்திக்கும் பொருத்திப் பார்க்கக் கூடாது. நாமக்கல் முட்டைகள் முற்றிலும் பாதுகாப்பானவை; எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்” என தெரிவித்தார்.
சர்ச்சையின் பின்னணி என்ன..?
சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் முட்டைகளை ஆய்வு செய்ததில் அதில் ‘நைட்ரோபியூரன்ஸ்’ கலந்திருப்பது உறுதியானதாக தரவுகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீயாக பரவி, மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுமக்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில், இந்த வாரமே அனைத்துப் பண்ணைகளிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு, முட்டை மாதிரிகளை சேகரிக்க உள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் மிக விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



