தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 30-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்களில் முக்கியமான ஒன்றான முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் புனரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, ”திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பொங்கலுக்காக வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை 15 ரக சேலைகள், 5 ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் புடவைகள்தான் உண்மையான பட்டு என்று அமைச்சர் காந்தி கூறியுள்ளார். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் (Zari) தங்கம் மற்றும் வெள்ளியின் அளவைக் குறைப்பது குறித்து அரசு தற்போது ஆலோசித்து வருவதாகவும்” அவர் அறிவித்தார்.
நெசவாளர்களின் நலன் குறித்துப் பேசிய அமைச்சர், ”தற்போது நெசவுத் தொழிலாளர்களின் நாள் ஒன்றுக்கான கூலி ரூ.800 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனம், திமுக ஆட்சியின் முதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும், 58 கூட்டுறவுச் சங்கங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த வியாபாரமும் அதிகரித்து லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும்” கூறியுள்ளார்.



