வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி இளம்பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மோறடாபாத் நகரத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, போலியான வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி, இளம் பெண்களை கடத்தும் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல், வேலை தேடிவரும் பெண்களை குறிவைத்து, அவர்களை வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்களில் 3 பேரும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பித்து வந்த இரண்டு பெண்கள், ரயிலில் பயணித்தபோது டிக்கெட் பரிசோதனை அதிகாரியிடம், தங்கள் பிரச்சனையை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இளம்பெண்களிடம் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இளம்பெண்கள் அளித்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளான அவ்னீஷ் யாதவ் மற்றும் விஜய் தாக்கூர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், இந்தக் குழு வேலை வாய்ப்பு என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலிடம் சிக்கிய மற்ற பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.