“வரலாறு படைத்த பீகார் மக்கள்.. அடுத்த வெற்றி தமிழ்நாட்டில்..” NDA வெற்றிக்கு பாஜக & கூட்டணி தலைவர்கள் வாழ்த்து!

annamalai nainar eps 1

சமீபத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது..


மதியம் 2 மணி நிலவரப்படி என்.டி.ஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகிக்கிறது.. மறுபுறம் இந்தியா கூட்டணி வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து பெரும் பின்னடைவை சந்திக்கிறது.. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.. இந்த சூழலில் தனிப்பெரும்பான்மை உடன் அங்கு என்.டி.ஏ கூட்டணி ஆட்சி மீண்டும் அமைய உள்ளது.

இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் பீகார் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தனது பதிவில் “ காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பீகார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

கடந்த ஆட்சிக் காலத்தில் “டபுள் இன்ஜின் சர்காராக” நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் திரு. நிதிஷ்குமார்
அவர்கள் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த பீகார் மக்கள் இந்தத் தேர்தலின் போதும் மாபெரும் வெற்றியை நமக்குப் பரிசளித்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்குக் கிடைத்த வெற்றி! அதிலும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் அவர்களின் முக்கியப் பங்களிப்பு பிஹார் கோட்டையில் நமது NDA-வின் வெற்றிக்கொடியை வலுப்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதும், தேர்தலில் தோல்வியடையும் பொழுது அதே தேர்தல் ஆணையத்தைச் சாடுவதும் தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே!

ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்..

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ பீகார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து வரலாற்றை உருவாக்கியுள்ளனர், நமது அன்பான பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் மீதும், பீகார் முதல்வர் திரு நிதிஷ்குமார் அவர்களின் திறமையான ஆட்சி மீதும் தங்கள் அபரிமிதமான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வெற்றி, பீகாரின் ஒவ்வொரு சகோதர சகோதரியும் வளர்ச்சி சார்ந்த எதிர்காலத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரமளித்தல், செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கான NDAவின் அர்ப்பணிப்பு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளது, தவறாக வழிநடத்தவும் பிளவுபடுத்தவும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளது.

இந்த முடிவு, குறுகிய, பிரிவினைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை விட முன்னேற்றம், நல்லாட்சி மற்றும் தேசிய நலன் எப்போதும் மேலோங்கும் என்ற செய்தியை நாட்டிற்கு வழங்குகிறது.” என்று பதிவிட்டுள்ளார்..

எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பீகார் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தனது பதிவில் “ பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்கு தக்க பதிலடியைக் கொடுத்துள்ளனர்.

கூட்டணியின் கூட்டுத் தலைமை மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அதிமுக சார்பாக, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் இந்த வெற்றியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலுவான தலைமை பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்..

Read More : பீகாரின் நீண்டகால முதல்வர் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு? விவரம் இதோ..!

RUPA

Next Post

ரூ. 50 சேமித்தால் போதும்.. ரூ.35 லட்சம் வருமானம் தரும் சூப்பரான அஞ்சல் சேமிப்பு திட்டம்..!! - முழு விவரம் உள்ளே..

Fri Nov 14 , 2025
Rs. Just save 50.. A super postal savings scheme that gives you an income of Rs.35 lakhs..!
post office money

You May Like