கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார்.. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது..
இந்த சம்பவம் தொடர்பாக விஜய் குறித்த நேரத்தில் வராமல் தாமதமாக வந்ததே காரணம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் பாஜக மற்றும் அதிமுக “மாநில அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்” என குற்றம் சாட்டின. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில், நடிகையும் பாஜக பிரமுகருமான கஸ்தூரி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “விஜய் தலைமையிலான கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதல்ல. கரூர் மக்களே இன்னும் விஜய் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், ஆனால் அவருடன் இருக்கும் நிர்வாகிகள் அவருக்கு துணை நிற்கவில்லை. விஜய் உடனிருப்பவர்களை விலக்கி, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அவர் வீட்டுக்குள்ளே முடங்கி விடக்கூடாது. சுய சிந்தனையுடன் மக்களுக்கான தலைவனாக உருவாக வேண்டும்.
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணைப் போல விஜய் தன்னுடைய அரசியல் அடையாளத்தை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டுமெனில், திமுக ஆட்சியை மாற்ற விஜய் உறுதுணையாக இருக்க வேண்டும். விரைவில் வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகும்,” என கஸ்தூரி தெரிவித்தார் என்றார்.



