சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே தினம் தோறும் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசிப்பதாலும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் பயணமே அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், தினசரி 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ஜனவரி 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் மற்றும் கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), தற்போது இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 1 முதல் இரவு 8.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), தற்போது மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு எழும்பூரை வந்தடைந்து வருகிறது. புதிய மாற்றத்தின்படி, ஜனவரி 1 முதல் இந்த ரயில் மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.55 மணிக்கே சென்னை எழும்பூரை சென்றடையும்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694), தற்போது இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு எழும்பூரை வந்தடையும். வருகிற ஜனவரி 1 முதல், இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16102) ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இந்த ரயில், ஜனவரி 1 முதல் காலை 6.05 மணிக்கே தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரயில்களின் புதிய நேர அட்டவணையை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
Read more: Flash : பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கம்.. அன்புமணி அறிவிப்பு..



