அசைவ உணவுகளில் மிக குறைவான பக்கவிளைவுகளை கொண்டதும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் என ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாகவும் விளங்குவது மீன். உடல் ஆரோக்கியத்திற்குத் தொடர்ந்து மீன் சாப்பிடுவது நல்லது என்றாலும், சில வகை மீன்களில் உள்ள பாதரச (Mercury) அளவும், கடல் மாசுபாடுகளும் சில குறிப்பிட்ட நபர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன. யாரெல்லாம் மீன் சாப்பிடும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாதரச பாதிப்பிற்கு மிக எளிதாக ஆளாகின்றனர். அதிக பாதரசம் கொண்ட மீன்களை உண்பது குழந்தைகளின் நினைவாற்றலைப் பாதிப்பதோடு, அவர்களை மந்தமாகவும், சோம்பேறிகளாகவும் மாற்றக்கூடும். குழந்தைகளுக்குச் சால்மன், திலாப்பியா மற்றும் மத்தி (Sardine) போன்ற பாதுகாப்பான மீன்களை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை (சுமார் 30-60 கிராம்) மட்டும் வழங்குவது சிறந்தது. குறிப்பாக, குழந்தைகளுக்கு மீன் கொடுக்கும்போது முட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
கர்ப்ப காலத்தில் சில வகை மீன்களில் உள்ள பாதரசம் நஞ்சுக்கொடி வழியாக கருவை சென்றடைந்து, குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கலாம். இதனால் கிங் கானாங்கெளுத்தி, சுறா, வாள்மீன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதேபோல், பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் மீனில் பாதரசம் இருந்தால், அது தாய்ப்பால் வழியாக குழந்தையின் நரம்பு மண்டலத்தைச் சிதைக்கக்கூடும். இவர்கள் சால்மன், இறால் போன்ற குறைவான பாதரசம் கொண்ட வகைகளை தோலையும் கொழுப்பையும் நீக்கிவிட்டுச் சமைத்து உண்பது பாதுகாப்பானது.
இரத்த உறைதலை தடுக்கும் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் மீன் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இதனால் சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் இரத்தம் உறைவதில் சிக்கல் ஏற்பட்டு அதிக இரத்தப்போக்கு உண்டாகலாம். இத்தகையவர்கள் மருத்துவரின் முறையான ஆலோசனைக்குப் பிறகே மீனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மீனில் உள்ள ‘பர்வல்புமின்’ (Parvalbumin) என்ற புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இது சமைப்பதாலோ அல்லது வறுப்பதாலோ அழிந்துவிடாது. கடல் உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தோலில் அரிப்பு, வீக்கம் முதல் ‘அனாபிலாக்ஸிஸ்’ எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலை வரை ஏற்படலாம். இவர்கள் ஒமேகா-3 சத்துக்களுக்காக மீனுக்குப் பதிலாக வால்நட்ஸ், ஆளி விதைகள் போன்ற தாவர உணவுகளை நாடுவது சிறந்தது.
நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் பச்சையாகவோ அல்லது அரைகுறையாக சமைக்கப்பட்ட மீன்களையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கடல் நீரில் இருக்கும் ‘விப்ரியோ வல்னிஃபிகஸ்’ போன்ற நச்சு பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் முறையாகச் சமைக்கப்படாத மீன்கள் மூலம் உடலில் நுழைந்து கடுமையான தொற்றுக்களை உண்டாக்கும். எனவே, மீனை எப்போதும் அதிக வெப்பநிலையில் நன்கு வேகவைத்து உண்பதே ஆரோக்கியமான முறையாகும்.



