வங்கி இயக்குநர்கள், பங்குதாரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் தங்களது உறவினர்களுக்குத் தாங்கள் பணிபுரியும் வங்கியில் அதிக அளவில் கடன் வழங்குவதாகவும், இந்தக் கடன்கள் பெரும்பாலும் வாராக்கடன்களாக மாறி மக்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அளவுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்படும் இத்தகைய கடன்களால் வங்கிகள் மீட்க முடியாமல் திணறுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தற்போது புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு விதிகளின்படி, வங்கியின் இயக்குநர்கள், புரோமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் (KMPs) மற்றும் வங்கியில் 5% பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர், தங்களது உறவினர்கள், அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகளுக்குத் தாங்கள் பணிபுரியும் வங்கியில் கடன் வழங்கக்கூடாது.
அப்படியே கடன் வழங்கப்பட்டாலும், அந்தக் கடன் தொடர்பான முடிவெடுக்கும் கூட்டங்கள், ஜாமீன் வழங்குதல், வாராக்கடன் தீர்வு போன்ற எந்தப் பணிகளிலும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளைத் தடுக்கக் கடன் வழங்குவதற்கான உச்சவரம்பையும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
* ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ. 50 கோடி வரை மட்டுமே கடன் வழங்க முடியும்.
* ரூ. 1 முதல் 10 லட்சம் கோடிக்குக் கீழ் சொத்து வைத்துள்ள நடுத்தர வங்கிகள் ரூ. 10 கோடி வரை கடன் வழங்கலாம்.
* ரூ. 1 லட்சம் கோடிக்குக் கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் ரூ. 5 கோடி வரையிலும், கூட்டுறவு வங்கிகள் ரூ. 1 கோடி வரையிலும் மட்டுமே கடன் வழங்க முடியும்.
இந்த விதிமுறைகளை மீறும் வங்கிகளுக்குப் பலத்த அபராதம் விதிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும், வங்கிகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்தக் கடன் விவரங்களை ரிசர்வ் வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த வரம்புகள் பொதுமக்கள் எடுக்கும் வீட்டுக் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்குப் பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Read More : கோர்ட் போட்ட உத்தரவு..!! நெருங்கிய போலீஸ்..!! ஓட்டம் பிடித்த தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்..!!