மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சாலமன் பிரபாகரன். இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை சோதித்த மருத்துவர்கள், 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் கர்ப்பத்திற்கு, அவர் படித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சாலமன் பிரபாகரன் தான் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடற்கல்வி ஆசிரியர் சாலமன் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.



