உலகளவில் அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு, உடற்பயிற்சி ஒரு முக்கிய தீர்வாக கருதப்பட்டு வரும் நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இதயம் தமனிகளில் இரத்தத்தை அதிக அழுத்தத்துடன் செலுத்தும் போது உருவாகும் இந்த நிலை, நீண்ட காலம் நீடித்தால் இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதிக்கக்கூடும். பொதுவாக 120/80 என்ற அளவு இயல்பானதாகவும், 130/80-க்கு மேல் இருந்தால் உயர் இரத்த அழுத்தமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், UCLA Health வெளியிட்ட தகவலின்படி, இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் 13 ஆண்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட மக்களை உள்ளடக்கிய 270 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்துள்ளனர். இதில், ஐசோமெட்ரிக் பயிற்சிகள் (பிளாங்க்) இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிகளில், உடல் அசையாமல் தசைகள் மட்டும் செயல்படும். ‘பிளாங்க்’, சுவரில் சாய்ந்து உட்காருவது போன்ற பயிற்சிகள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இத்தகைய பயிற்சிகள் தசைகளில் தற்காலிக அழுத்தத்தை ஏற்படுத்தி, பின்னர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த நாளங்களை தளரச்செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
எனினும், நீண்ட நேரம் தசைகளைச் சுருக்கி வைத்திருப்பது தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், இதய நோய் அல்லது கட்டுப்பாட்டில் இல்லாத இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பயிற்சிகளை தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மொத்தத்தில், ஐசோமெட்ரிக் பயிற்சிகள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஒரு பயனுள்ள வழியாக கருதப்பட்டாலும், அவற்றை சரியான முறையில் மற்றும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read more: இந்திய ராணுவத்தில் சேர அக்னிவீர் வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தகுதிதான்! விண்ணப்பிப்பது எப்படி?



