சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், உள்நாட்டு அரசு நிறுவனங்களை தாங்கிப் பிடிக்கும் வகையிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இனி அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசு நிகழ்ச்சிகளில் கர்நாடக பால் கூட்டமைப்பின் ‘நந்தினி’ தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கர்நாடகாவிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலில் இருந்தாலும், பல அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் கூட்டங்களில் குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த விதிமீறலைக் கட்டுப்படுத்தும் விதமாக, முதல்வர் சித்தராமையா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “அரசு அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக முன்பே அறிவுரைகள் வழங்கப்பட்டும் யாரும் பின்பற்றவில்லை. இனிமேல் இந்தக் கட்டுப்பாடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பிளாஸ்டிக் தடை உத்தரவுடன் சேர்த்து, அரசு நிறுவனமான நந்தினியை ஆதரிக்கும் விதமாக மற்றுமொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் மற்றும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும், நந்தினி பால் கூட்டமைப்புக்குச் சொந்தமான தயாரிப்புகளை மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.



