ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ‘சார்ட்டர்’ விமானத்தின் மூத்த விமானி, விமானப் பணிப்பெண் ஒருவரை நட்சத்திர விடுதி அறையில் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார், விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 18-ஆம் தேதி புட்டபர்த்தியிலிருந்து பெங்களூரு வந்த சார்ட்டர் விமானத்தின் விமானியாக 60 வயதான ரோகித் சரண் என்பவரும், 26 வயதான இளம்பெண் ஒருவர் பணிப்பெண்ணாகவும் இருந்துள்ளனர். விமானம் பெங்களூரு வந்தபின், அது உடனடியாகப் புறப்படவில்லை. அடுத்த நாள் (நவம்பர் 19) தான் விமானம் மீண்டும் புறப்பட வேண்டியிருந்ததால், விமானி ரோகித் சரண் ஒரு 5 ஸ்டார் விடுதியின் அறையில் தங்கியுள்ளார்.
அன்றிரவு, ரோகித் சரண் மற்றும் விமானப் பணிப்பெண் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது சிகரெட் புகைத்தபடி பேசிய விமானி ரோகித் சரண், அப்பெண்ணை தனது ஹோட்டல் அறைக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், தனது அறைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், விமானப் பணிப்பெண் இதற்குச் சம்மதிக்க மறுத்துள்ளார்.
விமானப் பணிப்பெண் மறுத்த போதும், விமானி ரோகித் சரண் அவரைக் கட்டாயப்படுத்தி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பணிப்பெண் கெஞ்சியும் அவர் விடவில்லை என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த மறுநாளான நவம்பர் 20-ஆம் தேதி, அவர்களின் விமானம் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள பேகும்பேட்டைக்கு சென்றது. அங்கு சென்றடைந்தவுடன் பாதிக்கப்பட்ட பணிப்பெண், பேகும்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக, விமானி ரோகித் சரண் மீது புதிய பி.என்.எஸ். சட்டப்பிரிவு 63-இன் (பாலியல் வன்கொடுமை) கீழ் ‘ஜீரோ எஃப்ஐஆர்’ பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் பெங்களூரு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள ஹலசூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது ஹலசூர் போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : ஆதாரில் வருகிறது அதிரடி அப்டேட்..!! இனி எல்லாமே QR கோடு தான்..!! டிசம்பர் முதல் அமல்..!!



