11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ் மொழியின் இலக்கிய திறன் மேம்படுவதற்காக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல்’ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், மாணவர்களின் இலக்கியப் பார்வை, வாசிப்பு நுண்ணறிவு, மொழிப்பண்பு ஆகியவை மேம்படும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால், மாணவர்கள் தேர்வை பயமின்றி, ஆர்வத்துடன் எதிர்கொள்கிறார்கள்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களில், 1500 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வீதம் உதவித்தொகை ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். இந்தத் திட்டம், மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவியாக இருப்பதோடு, தமிழ் இலக்கியம் மீதான பற்றையும் வளர்க்கும் வகையில் அமைகிறது. இத்தேர்வுக்கான நடைபெறும் தேதி, விண்ணப்பிக்கும் முறை, மற்றும் மற்ற விவரங்கள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது பள்ளி நிர்வாகம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தகவல்களைப் பெற்றுத் தேர்விற்கு தயார் செய்யலாம்.
இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை இன்று (ஆகஸ்ட் 22) முதல் செப்டம்பர் 4 வரை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் ரூ.50 கட்டணத்தைச் சேர்த்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.
Read More : நீங்கள் எந்த தேதியில் பிறந்தீர்கள்..? உங்களுக்கான சரியான துணை யார் தெரியுமா..? ஈசியா கண்டுபிடிக்கலாம்..!!