மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 21-வது தவணை அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, விவசாயிகள் கட்டாயம் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் (Unique Farmer ID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் இந்த தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. வருங்காலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனைத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து மானியத் திட்டங்களுக்கும் இந்த அடையாள எண்ணே அடிப்படை ஆவணமாக இருக்கும். ஏற்கெனவே ஒரு வட்டாரத்தில் அடையாள அட்டை பெற்றிருந்தாலும், மற்ற வட்டாரங்களில் உள்ள நில விவரங்களையும் இணைத்தால் மட்டுமே முழுமையான தகுதி உடையவராகக் கருதப்படுவார்கள்.
எனவே, பி.எம். கிசான் திட்டப் பயனாளிகள், தங்களின் 21வது தவணைத் தொகை பெறுவதைத் தொடரவும், எதிர்கால அரசு நலத்திட்டங்களைப் பெறவும், உடனடியாகத் தங்களின் நில உடைமை விவரங்களை அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களை அணுகிச் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு, விவசாயிகள் தங்கள் ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் மற்றும் சிட்டா நகலை காண்பித்து உடனடியாக இந்த அடையாள எண்ணைப் பெறுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : வீடு, நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்..!! இடைத்தரகர்களுக்கு வேலையே இல்ல..!! இனி எல்லாமே ஆன்லைன் தான்..!!



