மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 21-வது தவணை வழங்கப்பட உள்ளது. பிஎம் கிசான் 21வது தவணைத்தொகை பெறுவது தொடர்பாக கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின்கீழ் (PM-KISAN) தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் 21வது தவணை தொகை பெற முடியும் என கூறியுள்ளார். பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின்கீழ், கரூர் மாவட்டத்தில் 31704 விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/- வீதம் ஆண்டுக்கு ரூ.6000/- ஒன்றிய அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 20 தவணைகளில் உதவித் தொகை வழங்கப்பட்டு உள்ளது. 21வது தவணை உதவித் தொகை பெற தனித்துவ விவசாய அடையாள அட்டையில் பதிவு செய்து அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகளில் இதுவரை 21 ஆயிரத்து 280 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 10424 பேர் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 2025ம் மாத மாதத்தில் 21வது தவணை பெறுவதற்கு விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டியது கட்டாயம். எனவே, விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தங்களது சிட்டா, ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண் உடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்று பிரதமரின் கௌரவ நிதி உதவி தொகை 21வது தவணை பெறுவதை உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.



