பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரை பற்றி நாடாளுமன்ற உரையில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பேசவே இல்லை என்றும் இது மிகப் பெரிய அவமதிப்பு என்றும் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில் உள்ள பைசரன் சமவெளிப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் 31 வயதான சுபம் திவேதியும் ஒருவர். அவர் தனது மனைவி மற்றும் மைத்துனி முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. நேற்றைய விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் மனைவி அஷன்யா திவேதி பிரதமர் மோடியின் உரை குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் கூறிய துயரமிகுந்த வார்த்தைகள், நாடு முழுவதும் பெரும் மனவேதனையை உருவாக்கியுள்ளன.அவரது வேதனை தனிப்பட்டது மட்டுமல்ல, இது, நாட்டுக்காக உயிர்நீத்தவர்களின் குடும்பங்களை அரசு கவனிக்கப்படவில்லை என்ற ஒரு உணர்வை பிரதிபலிக்கின்றது.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இரண்டு மணி நேர உரை நிகழ்த்திய போதும், உயிரிழந்தவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அஷன்யா திவேதி கூறினார். பிரதமர் மோடியின் மௌனம், நாட்டின் உயர்ந்த தலைமையிலிருந்து அங்கீகாரம், அனுதாபம் மற்றும் ஆறுதல் எதிர்பார்த்திருந்த பலரின் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மௌனம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகுந்த மன வலி ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், இத்தகைய மௌனம் வெறும் கவனக்குறைவாக மட்டும் தெரியவில்லை அவர்கள் அனுபவிக்கும் வலியை புறக்கணித்தது போலவும், அவர்கள் தியாகத்துக்கு மரியாதை வழங்க மறுத்ததுபோலவும் உணரப்படுகிறது என்று கூறினார், பிரதமரின் இந்த செயலை, விமர்சகர்களாலும் பொதுமக்களாலும் ஒரு தலைமைத்துவ உணர்விழப்பின் கடுமையான தோல்வியாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாடு தனது வீரர்களை இழக்கும் போது, அந்த நாட்டின் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கப்பது என்னவென்றால், ஒரு அஞ்சலி, ஒரு நினைவு தருணம் அல்லது குறைந்தது சில ஆறுதலான வார்த்தைகள்தான். இதற்கு பதிலாக, இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உரையில் அந்த துயர நிகழ்வை முழுமையாக தவிர்த்ததன் மூலம், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு நாட்டின் தலைவர், தனது உரையில் சில நிமிடங்களாவது வீரர்களின் நினைவிற்கும் மரியாதைக்கும் ஒதுக்கவில்லை என்றால், அது மக்களின் நம்பிக்கையை குலைத்துவிடும் என்பதே பலரின் கருத்தாகும்.
Readmore: #Flash : மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.480 உயர்வு.. நகைப்பிரியர்கள் ஷாக்..