திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு மாமூல் கேட்டு அடாவடி செய்த விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (வயது 45), திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலராக உள்ளார். இவர், கடம்பத்துார் ஒன்றியத்தில் இயங்கி வரும் ‘கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி’ என்ற துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் தனியார் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். இந்த தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக விஸ்வநாத் (வயது 50) பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுக்காக, செலவுகளை தொழிற்சாலை தரப்பே ஏற்க வேண்டும் எனவும் அதற்கு பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, விஸ்வநாத் அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவின் உத்தரவுப்படி, மணவாளநகர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர், விசிக நிர்வாகி குமாரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரை கிளைச்சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.