தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையத்தில், நாளை மறுதினம் (டிசம்பர் 18) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மொத்தம் 84 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
காவல்துறை விதித்துள்ள 84 நிபந்தனைகளில் முக்கியமாக, பொதுக்கூட்ட மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சில அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பரப்புரை வாகனம், வி.ஐ.பி. பெட்டிகள் (VIP Boxes), பெண்கள் பெட்டிகள், இதர பெட்டிகள், உள் நுழையும் வழிகள் மற்றும் வெளியேறும் வழிகள் குறித்த தெளிவான வரைபடம் காவல்துறையிடம் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சியின்போது ஒவ்வொரு பெட்டியிலும் 80% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பெட்டியிலும் குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை, அனுமதி மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட ஒருபோதும் மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவசர காலங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே தடையின்றிச் சென்று வரத் தனி வழி விடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதுடன், நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து, அந்தப் பதிவுகளை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், மின்கம்பங்கள், மரங்கள், கட்டிடங்கள், விளம்பர பதாகைகள் மீது யாரும் ஏறி நிற்கக் கூடாது என்றும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குக் கட்டாயம் மேற்கூரை (பந்தல்) அமைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விஜய் பொதுக்கூட்ட இடத்துக்கு வரும் மற்றும் புறப்படும் நேரம், அவர் பயன்படுத்தும் வழித்தடங்கள் குறித்த விவரங்களைக் காவல்துறையிடம் முன்பே தெரிவிக்க வேண்டும். மேலும், விஜயின் வாகனத்தைத் தொடர்ந்து வரும் 10 வாகனங்களின் பதிவெண் உள்ளிட்ட விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, விஜயின் வாகனம் வரும் வழியில் ‘ரோட் ஷோ’, வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை எனவும் காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கூட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள பெரிய விளம்பரக் கட்-அவுட் உள்ள இடங்களில் தொண்டர்கள் ஏறுவதைத் தவிர்க்க முள் கம்பிகள் சுற்றப்படும் என உறுதியளித்திருந்தார். மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தில் குடிநீர், அவசர ஊர்திகள், கழிவறைகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அரண் தொடர்பான வசதிகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
Read More : உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி? இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்..!! சிம்பு கொடுத்த டிப்ஸ்..!!



