திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். மார்ட்டினின் மகள் டெய்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற போதெல்லாம் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறும்.
இந்த நிலையில், நேற்று நடந்த தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, மத்திய அரசையும் மாநில அரசையும் சீண்டும் வகையில் பேசியிருந்தார். இதனால் மாமனார் மார்ட்டின் தொழிலில் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் மனைவியும், மார்டினின் மகளுமான டெய்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்ட்ராகிராம் பதிவில், ”நான் டெய்சி. நானும், ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில்முறை வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தொழில்முறை, அரசியல் முடிவுகளும், நிலைப்பாடுகளும் சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன.
மேலும் இதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த அறிவிப்பு, ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எங்கள் ஈடுபாடு குறித்து பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் இருவரும் தனித்துவமான வேலை, வாழ்க்கைகளைக் கொண்ட தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம்.
நாங்கள் ஒருவருக்கொருவர் தனியுரிமை, அவரவர் கருத்துக்களை மதிக்கிறோம். எங்களைப்பற்றி வேறுவிதமாக எந்தவொரு தவறான கருத்துக்களை கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் பரஸ்பர நலனுக்காக, எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எங்கள் குடும்பத்தை ஒருவருக்கொருவர் தொழில்முறை மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Read more : இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை..! ஹோட்டலில் அதிரடி ரெய்டு..!! – அரசு அதிரடி