தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனி பட்ஜெட் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றி உள்ளது வேளாண் பட்ஜெட். விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். பலத் துறைகளை ஒன்றிணைத்து அவியல் கூட்டுப் போன்று ஒரு வேளாண் பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். 5-வது முறையாக 1.30 மணி நேரம் வேளாண் பட்ஜெட்டை வாசித்ததுதான் சாதனை. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. தவறு செய்ய வசதியான திட்டங்களே வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவில்லை. ஆண்டுதோறும் குறைந்துதான் வருகிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் தான் இதில் உள்ளன. விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை ஊழல் செய்யும் அரசாங்கம் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசாங்கம் தான். நான் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை கைவிட்டுவிட்டனர். விவசாயிகளுக்கு நீர் தான் முக்கியம். கடன் பெற்றுத்தான் திட்டங்களை நிறைவேற்றிய சூழல் உள்ளது. நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அரசு நிறைய கடன் வாங்கியுள்ளது. நிதி மேலாண்மையை சரிசெய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது..? கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது” என்றார்.