பரியேறும் பெருமாள், கர்ணன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கி, ஹர்டிக் வெற்றியை திரையுலகில் பதிவு செய்துள்ளார். இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் அனைவரும் சமம் என்கிற கொள்கைக்கு போராடும் துடிப்பான இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உதயநிதி.
உதயநிதிக்கு தந்தையாக வடிவேலுவும், வில்லனாக ஃபகத் பாசிலும், நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் வெளியாகும் முன்னரே அதாவது அமைச்சர் பதவியை ஏற்றதுமே இது தான் தன்னுடைய கடைசி படம் என உதயநிதி கூறியதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், இப்படம் நேற்று முன்தினம், வெளியானது. முதல் நாளில் உலகம் முழுவதும் 10 கோடி வரை வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விமர்சன ரீதியாக, நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் டல் அடித்துள்ளது. எனினும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவிற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக வடிவேலு ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். படத்தில் மாமன்னனே வடிவேலு தான் என்பதால் அவருக்கு அதிகமான தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.