தமிழக அரசின் இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”எதிர்வரும் மழை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கத்தை முறையாக நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையுடன் இணைந்து புதிய வழித்தடங்களை கண்டறிந்து பேருந்துகள் இயக்கி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதலாக 2400 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். பேருந்தில் இலவசமாக பெண்கள் பயணிப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். பெண்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது என்று அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மேலாண் இயக்குநர்கள், கிளை மேலாளர்களின் மூலம் அறிவுரை வழங்குவார்கள். வெள்ளிக்கிழமை பயணம் தொடங்கும் போது ஆம்னி பேருந்து கட்டணம் குறைந்து இருக்கும். இதற்கான அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். அவர்கள் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்கள்.

தீபாவளி சிறப்பு பேருந்து அறிவிப்பு விரைவில் வரும். பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பக்கத்து மாநிலங்களில் டீசல் விலை ஏறும்போதெல்லாம் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது. சில மாநிலங்களில் போக்குவரத்துக் கழகங்களே கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன. பேருந்து கட்டணம் நிச்சயம் உயராது. அரசு பேருந்துகள் தற்போது இருக்கும் கட்டணத்திலேயே இருக்கும்” என்றார்.