தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக அமையும் போகி திருநாளை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் கொண்டாட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற நச்சுப் பொருட்களை எரிப்பதை தவிர்த்து, இயற்கையோடு இணைந்த ஒரு மாற்றத்தை படைக்க அரசு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
முன்னோர்கள் காலத்தில் இயற்கை சார்ந்த பொருட்களையே எரித்து வந்தனர். ஆனால், தற்கால போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக், டயர்கள், டியூப்கள், ரசாயனம் கலந்த ஆடைகள் மற்றும் காகிதங்களை எரிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இத்தகைய செயல்களால் வெளியேறும் அடர்ந்த கரும்புகை, வளிமண்டலத்தில் காற்றை தரம் தாழ்த்திப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, சென்னையில் இந்தப் புகை மூட்டத்தால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு கண்பார்வை மறைப்பு ஏற்பட்டு விபத்துகள் நேரிடும் அபாயமும் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறமிருக்க, இந்தப் புகையை சுவாசிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற தீவிர உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
இதனை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, போகிப் பண்டிகைக்கு முந்தைய நாள் மற்றும் பண்டிகை நாளன்று சென்னையின் முக்கிய 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தை பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் அவ்வப்போது வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டு போகி கொண்டாட்டத்தின் போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களை எரிக்காமல், மாசில்லா தமிழகத்தைப் படைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Read More : சித்தர்கள் வணங்கும் சிவன் கோயில்..!! 800 ஆண்டுகால வரலாறு..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?



