பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை உள்பட பல இடங்களில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ”பொங்கல் பண்டிகையையொட்டி இன்று காலை வரை சிறப்பு பேருந்துகளில் 3.94 லட்சம் பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து தினமும் இயங்கும் 2,100 பேருந்துகளுடன் 2,010 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. மேலும், நாளை பொங்கல் என்பதால் இன்று காலையில் இருந்தே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயிலிலும் ஏராளமானோர் திரும்புகின்றனர். கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர்.

இன்றும் ஏராளமானவர்கள் செல்ல உள்ளதால் சென்னையை காலி செய்தவர்களின் எண்ணிக்கை என்பது சுமார் 10 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று அதிகாலை முதல் ஏராளமானவர்கள் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிகமானவர்கள் சொந்த ஊர் சென்று வருகின்றனர். இதனால், சென்னையின் பல இடங்களில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.