ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
வரும் 2026-ல் ஜனவரி 13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஜனவரி 12-ம் தேதி திங்கள்கிழமையும் விடுப்பு கிடைக்கும் சூழல் உள்ளவர்கள், 9-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட திட்டமிடுவார்கள்.
விரைவு ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், ஜனவரி 9-ம் தேதி பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். ரயில் பயணத்துக்கு 60 நாட்கள் முன்பு முன்பதிவு செய்ய முடியும் என்பதால், மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நவம்பர் 13, 14-ம் தேதிகளில் அதிகம் பேர் முன் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17, 18-ல் திரும்புவோர் வரும் 18, 19-ம் தேதியன்று முன்பதிவு செய்யலாம்.



