பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. விசாரணையில் நீதிபதி பொன்முடிக்கு பல கேள்விகளை எழுப்பினார். “ பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக இருந்தவர் ஏன் இப்படி பேச வேண்டும்..? அமைச்சராக இருந்தவர் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.” என்று நீதிபதி கூறியிருந்தார்..
மேலும் வெறுப்பு பேச்சு தொடர்பான பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய காவல்துறை தயங்கினால் அந்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
கடந்த 8-ம் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதி பொன்முடியை கடுமையாக சாடினார்.. மேலும் ” மக்களுடன் தான் அமைச்சரும் வசிக்கிறார் என்ற எண்ணம் வர வேண்டும்.. உங்கள் செயலை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து அமைதியாக இருக்க முடியாது.. பொன்முடி மீது புகாரளித்தவருக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற்ற பிறகே வழக்கை முடிக்க முடியும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்..
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, முன்னாள் அமைச்சர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில் முகாந்திரம் இல்லை என முடித்துவைக்கப்பட்டதாகவும், புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து சம்மந்தப்பட்ட புகார் தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி புகார்களில் முகாந்திரம் இல்லை என எந்த அடிப்படையில் போலீசார் முடிவுக்கு வந்தனர் என கேள்வி எழுப்பினார்.
அப்போது 1972-ல் சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துகளை பொன்முடி தெரிவித்தார் எனவும், வீடியோவை முழுமையாக பார்த்தால் அதன் விவரங்கள் தெரியவரும் என்றும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.. இதையடுத்து பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவையும், 1972-ல் சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சின் விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.