சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சு தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.
மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சு அரவிந்த். மோகன்லால், மம்மூட்டி மற்றும் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் கூட அவர் சேர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக அவர் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
திறமையான நடனக் கலைஞரான அஞ்சு, ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை அஞ்சு தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசி உள்ளார். தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த பல துயரங்கள் குறித்தும் அவர் பேசி உள்ளார்..
சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், தனது இரண்டு திருமண உறவுகளும் சோகத்தில் முடிந்ததாக பகிர்ந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருப்பதாகவும் அஞ்சு தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர் “எனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. எனக்கு இரண்டாவது திருமணம் நடந்தது, ஆனால் என் கணவர் இறந்துவிட்டார். நான் தற்போது லிவ்-இன் உறவில் இருக்கிறேன். என் துணையின் பெயர் சஞ்சய் அம்பல பரம்பத். நாங்கள் கடந்த 5 வருடங்களாக மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். பெங்களூருவில் நடன ஆசிரியர் என்ற அடையாளத்தை எனக்கு அளித்தவர் அவர்தான். நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது சஞ்சய் எனக்கு முதல் காதல். எங்கள் கதையை ஒரு படமாகவே எடுக்கலாம்,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “நாங்கள் இருவரும் சேர்ந்து பார்த்த 96 திரைப்படத்தை மிகவும் விரும்பினோம். அந்தப் படத்தைப் பார்த்தது எனக்கு என் பள்ளி நாட்களை நினைவூட்டியது. அவரும் ஒரு நடனக் கலைஞர். அவர் ஐடி துறையில் பணிபுரிந்தார். ஆனால் இப்போது தனது வேலையை விட்டு, எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார்., நாங்கள் முதன்முதலில் ஒரு நடன வகுப்பில் சந்தித்தோம். அப்போது, மொபைல் போன்கள் இல்லை. அப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். ஆனால் இப்போது மீண்டும் சேர்ந்துள்ளோம்.. பெங்களூருவில் உள்ள எனது நடன அகாடமிக்கு அவர்தான் பெயரிட்டார். அதற்கு அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ் என்று பெயர்..” என்று தெரிவித்தார்.
சுரேஷ் கோபி மற்றும் அன்னி முக்கிய வேடங்களில் நடித்த சிபி மலையில் அக்ஷரம் என்ற படத்தின் மூலம் நடிகை அஞ்சு அரவிந்த் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மம்முட்டியின் அழகிய ராவணன் மற்றும் சித்தார்த்தா, மோகன்லாலின் நரண் என மலையாளத்தில் பல ஹிட் படங்களில் அஞ்சு நடித்துள்ளார். பூவே உனக்காக படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அஞ்சு. இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து அருணாச்சலம், ஒன்ஸ்மோர், உன்னருகே நானிருந்தால், வானத்தைப்போல உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.