2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கால்பதித்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற முதியவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில், வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் முந்தைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரங்கள் மற்றும் பணவீக்கக் காரணிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின்படி, பொதுமக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டியும், சாதாரணச் சேமிப்புக் கணக்குகளுக்கு 4 சதவீத வட்டியும் தொடர்ந்து வழங்கப்படும். குறிப்பிடத்தக்க அம்சமாக, வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் நீட்டிக்கப்படுவது இது ஏழாவது முறையாகும். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக 8.2 சதவீத வட்டி விகிதம் தக்கவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிசான் விகாஸ் பத்திரம் (KVP) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற நீண்டகாலத் திட்டங்களிலும் பழைய வட்டியே தொடர்கிறது. வணிக வங்கிகளின் வட்டி விகிதங்களுடன் ஒப்பிடுகையில், அஞ்சலகத் திட்டங்களில் கூடுதல் லாபமும் அரசின் முழுமையான பாதுகாப்பும் கிடைப்பதால், கிராமப்புற மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Read More : தங்கத்தை விட காஸ்ட்லி..!! ஒரு கிலோ 30 லட்சமா..? உலகின் டாப் விலையுயர்ந்த இறைச்சிகள் எது தெரியுமா..?



