அன்றாட வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், “சேமிப்பு” என்பது ஆடம்பரமல்ல; அவசியமாக மாறியுள்ளது. குடும்பச் செலவுகள், மருத்துவத் தேவைகள், குழந்தைகளின் கல்வி, எதிர்பாராத அவசரங்கள் என அனைத்தையும் சமாளிக்க வேண்டிய சூழலில், சம்பளம் முழுவதையும் செலவு செய்வதற்கான மனநிலை மாறி வருகிறது. முதலில் சேமித்து, பின்னர் செலவிடும் பழக்கம் மக்களிடையே மெதுவாக வேரூன்றி வருகிறது.
நிதி ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததன் விளைவாக, வங்கிக் கணக்குகளை தாண்டி பலரும் திட்டமிட்ட முதலீடுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பான வருமானம், அரசு உத்தரவாதம், நிலையான பலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசு ஆதரவு பெற்ற சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன.
அந்த வகயில் தொடர் வைப்புத் திட்டம் என்பது தபால் அலுவலகம் வழங்கும் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். இதில் நீங்கள் விரும்பும் அளவுக்கு சேமிக்கலாம். ஒவ்வொரு மாதமும் சேமிக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.7 சதவீத வட்டி கிடைக்கும். ஐந்து வருட முதிர்ச்சிக்குப் பிறகு, நீங்கள் முதலீடு செய்த தொகையுடன் வட்டி சேர்க்கப்படும். இருப்பினும், இந்தத் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். அதாவது, மொத்தம் 10 ஆண்டுகளுக்கு நீங்கள் இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.
தொடர் வைப்புத் திட்டத்தில், நீங்கள் ரூ. 100 முதல் முதலீடு செய்யலாம். ஒரு வருடம் முதலீடு செய்தால், முதலீடு செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் 8.5 சதவீத வட்டி செலுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயிரம் சேமித்து வைத்தால்.. ஐந்து ஆண்டுகளில், நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகை ரூ.3 லட்சமாக இருக்கும். இதற்கு வட்டியாக ரூ.56,830 டெபாசிட் செய்வீர்கள்.
இதனால், மொத்தம் ரூ.3,56,830 கிடைக்கும். இருப்பினும், நீங்கள் அதை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அசல் தொகை 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சமாக இருக்கும். அதை வட்டியுடன் சேர்த்தால், பத்து ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கிடைக்கும். இந்த வழியில், மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் மட்டும் சேமித்து ரூ.8.5 லட்சம் பெறலாம்.



