இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 70 கிமீ (43.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுவரை எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.
2.31 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 138.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி, அபேபுராவிலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இருப்பினும், இதுவரை எந்த சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் தெற்கு கடற்கரையில் நேற்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர்.. இந்த நிலையில் இன்று இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் பிலிப்பைன்ஸின் தெற்கு மின்டானாவோ பகுதிக்கும் இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசிக்கும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. இருப்பினும், அது பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் மனாய் நகரத்திலிருந்து கிழக்கே 43 கி.மீ தொலைவில் கடலில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டாவோ சர்வதேச விமான நிலையம் உட்பட பல கட்டிடங்களின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். விமான நிலையம் செயல்பாட்டில் இருந்தபோதிலும், எந்த விமான நடவடிக்கையும் பாதிக்கப்படவில்லை.
டாவோ ஓரியண்டலில் உள்ள கவர்னர் ஜெனரோசோ நகரத்தின் பேரிடர் தணிப்பு அதிகாரி ஜுன் சாவேத்ரா இதுகுறித்து பேசிய போது “நான் எனது காரை ஓட்டிச் சென்றபோது அது திடீரென அசைந்தது, மின் கம்பிகள் பெருமளவில் அசைவதைக் கண்டேன். நிலம் அதிர்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடினர்,” என்று தெரிவித்தார்.
Read More : ஆப்கானிஸ்தானில் பணக்கார இந்துவாக இருந்தவர்; ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார்!



