அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
அரசு ஊழியர்களுக்கான திருமண முன் பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இனி பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன் பணமாக வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000, ஆண் ஊழியர்களுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விதி எண் 111-ன் கீழ் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தோடு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில், பண்டிகை கால முன்பணத்தை 10,000 ரூபாயில் இருந்து ரூ.20000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயிலும் போது அதற்காக வழங்கப்படும் முன்பணம் உயர்த்தப்படும். பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கப்படும் பரிசுத்தொகை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதே போல் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன் இதுவரை பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் மற்றும் ஆண்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.