பிரபல இளம் கலைஞர் ஒய்.ஜி.மதுவந்தியின் தாயார் சுதா, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய இளம் வயதிலேயே நாடக நடிகையாகவும், பாடகியாகவும் புகழ் பெற்றவர் சுதா. இவர், இந்திரா காந்தி முன்னிலையில் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில் நடித்துள்ளார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.
இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்று, கல்லூரி இறுதித் தேர்வு தானாம். அப்போது, தனது மகள் மதுவந்தியை வயிற்றில் சுமந்து கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். சுதாவின் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு சற்று தாமதமாக நடந்தது. இதனால், தன்னுடைய கர்ப்ப காலத்தில் எவ்வித மன அழுத்தமோ, டென்ஷனோ இல்லாமல் இருந்தார். மதுவந்தி நவம்பர் மாதத்தில் பிறக்க இருந்த நிலையில், மூன்று வாரங்கள் தாமதமாகப் பிறந்தார் என்றும் சுதா கூறியிருக்கிறார்.
ஒரு நாடகத்தில், ஒரு கலைஞர் வரவில்லை. இதனால், அவருடைய மாமனார் சுதாவை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கூறியுள்ளார். ஆனால், இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் தனது சொந்த கணவருக்கே அண்ணி வேடத்தில் நடித்தது தான்.
மற்றொரு மறக்க முடியாத நிகழ்வு, இளையராஜாவின் அழைப்பை மறுத்தது தான். அப்போது, ஏர் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் ஒரு பாடல் ரெக்கார்டிங்கிற்காக என்னை பிரசாத் ஸ்டுடியோவுக்கு அழைத்தார். ஆனால், அதை ஒரு ப்ராங்க் கால் என நினைத்து மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். சுதா அவர் தவறவிட்ட அந்தப் பாடல், விஜயகாந்தின் ‘அம்மன் கோயில் கிழக்காலே’ திரைப்படத்திற்காக என்பது குறிப்பிடத்தக்கது.