தமிழக அரசியலில் தேமுதிக, தற்போது “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தீவிர பிரச்சாரத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 50 சதவீத பணிகள் திருப்திகரமாக இருந்தாலும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு இன்னும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரத்தில் தேமுதிக எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் சூழலில், அதற்குப் பிரேமலதா, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட இன்னும் கால அவகாசம் இருப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என்றும் கட்சியின் நலன் மற்றும் தொண்டர்களின் விருப்பமே முதன்மையானது என்று கூறினார்.
கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் ஒப்படைத்த இந்தப் பேரியக்கத்தை ஒரு தாயின் அரவணைப்போடு வழிநடத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர கட்சிகள் மிரட்டப்படுகிறதா என்ற காரசாரமான கேள்விக்கு, இது கேப்டன் உருவாக்கிய இரும்புக்கோட்டை; தேமுதிகவை யாராலும் மிரட்டவோ, பணியவைக்கவோ முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சுயமரியாதை இருக்கிறது என்றார்.
மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது கட்சியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக பிரேமலதா தெரிவித்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தனது சூறாவளிப் பயணத்தைத் தொடர உள்ள அவர், தேர்தல் களத்தில் தேமுதிக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்று கூறியுள்ளார். திமுகவின் பணிகளைப் பாராட்டும் அதே வேளையில், கட்சியின் தனித்தன்மையையும் உரிமையையும் அவர் நிலைநிறுத்தியுள்ளது அரசியல் நோக்கர்களை கவனிக்க வைத்துள்ளது.
Read More : எஸ்பிஐ-யில் இந்த இலவச சேவைகள் கிடைக்காது..! இனி கட்டணம் செலுத்த வேண்டும்.. பிப்., 15 முதல் அமல்..!



