நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவா விஜய் என்பவருக்கு எதிராகத் திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தேவா விஜய், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து நீண்டகாலம் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியதாகவும் கூறி, அந்த இளம்பெண் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி புகழேந்தி, தற்காலத்தில் தனிப்பட்ட உறவு தகராறுகளைத் தீர்க்கக் குற்றவியல் சட்டங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் போக்கைக் கவலையுடன் சுட்டிக்காட்டினார். “தனிப்பட்ட அல்லது உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சம்மதத்துடன் உறவு கொண்டு, பின் முறிவு ஏற்படும்போது குற்றவியல் வழக்கு தொடர முடியாது” என்று முன்பே கருத்து தெரிவித்திருந்தார்.
திருமணத்திற்கு முந்தைய உறவு இன்று சர்வ சாதாரணம் :
இந்நிலையில், மனுதாரர் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி புகழேந்தி பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். “மனுதாரரும், புகார்தாரர் இளம்பெண்ணும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாகப் பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இவ்வளவு நீண்டகால உறவின்போது புகார்தாரர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது, அந்த உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றது என்பதைக் காட்டுகிறது.
திருமணம் செய்வதாகக் கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்டகாலம் உடல்ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும்போது குற்றவியல் சட்டத்தினைப் பயன்படுத்துவது தவறு” என்று சுட்டிக் காட்டினார்.
மேலும், நீதிபதி தனது தீர்ப்பில், “வற்புறுத்தல், ஏமாற்றுதல், அல்லது சம்மதத்தை இயலாமையால் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது என்றும் தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காகவோ மாற்றக் குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது” என்றும் தெரிவித்தார். மேலும், “உணர்ச்சி ரீதியான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, சட்ட நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம்” என்று கூறி, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.



