இன்றைய இயந்திரமயமான உலகில், காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் இல்லத்தரசிகளுக்கும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கும் ‘பிரஷர் குக்கர்’ ஒரு வரப்பிரசாதமாக தெரியலாம். 45 நிமிடம் ஆகும் சமையலை வெறும் 10 நிமிடத்தில் முடித்துத் தரும் இந்த தொழில்நுட்பம், நேரத்தை மிச்சப்படுத்தினாலும் நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்லப் பறித்து வருகிறதோ என்ற அச்சம் உணவியல் நிபுணர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, குக்கரில் சமைக்கப்படும் சாதம், சத்தற்ற சக்கையாக மாறுவதுடன் பல்வேறு வாழ்வியல் நோய்களுக்கு நுழைவுவாயிலாக அமைவதாகவும் எச்சரிக்கின்றனர்.
சாதாரண பானையில் சாதம் சமைக்கும்போது, அதிலுள்ள அதிகப்படியான ‘ஸ்டார்ச்’ (Starch) எனப்படும் மாவுச்சத்து கஞ்சியாக வடிக்கப்பட்டுவிடும். ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்த மாவுச்சத்து வெளியேற வழியின்றி சாதத்துடன் அப்படியே தங்கிவிடுகிறது. இத்தகைய ஸ்டார்ச் மிகுந்த சாதத்தை தொடர்ந்து உட்கொள்வது உடலில் கார்போஹைட்ரேட் அளவை அதிகரித்து, உடல் பருமனுக்கு வித்திடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் 90 சதவீத மக்கள் தங்களது உயரத்திற்கேற்ற உடல் எடையை (BMI) பராமரிக்க தவறுவதற்கு இத்தகைய உணவுப் பழக்கங்களே முக்கிய காரணமாகின்றன. இதுவே காலப்போக்கில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயப் பாதிப்புகளுக்கு அடிப்படை காரணியாக மாறுகிறது.
இந்த அபாயம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, வளரும் குழந்தைகளுக்கும் பொருந்தும். இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் போதிய உடலுழைப்பு இன்றி வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அவர்களுக்கு குக்கரில் சமைத்த அதீத மாவுச்சத்து கொண்ட உணவுகளை வழங்குவது, ‘சிறுவயது உடல் பருமன்’ என்ற பேராபத்தை உருவாக்குகிறது. குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள், பழைய முறையான கஞ்சி வடிக்கும் பழக்கத்திற்கு மாறுவது காலத்தின் கட்டாயமாகும். கஞ்சி வடிக்கப்பட்ட சோற்றில் நார்ச்சத்து மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதால், அது செரிமானத்திற்கும் உடலுக்கும் மிகவும் நல்லது.
அவசர காலங்களில் அல்லது விசேஷ நாட்களில் பிரியாணி போன்ற உணவுகளுக்கு மட்டும் குக்கரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அன்றாட உணவை நஞ்சாக்காமல் இருக்க, பானை அல்லது பாத்திரங்களில் சமைக்கும் ஆரோக்கியமான முறையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். நேரத்தை விட நம் ஆரோக்கியமே விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.



