நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தேசிய தலைநகரான டெல்லி செங்கோட்டையில் இன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வின்போது, 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் காவல்துறையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் நடைபெறவுள்ளது.
செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. சுமார் 11,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் காவல் மற்றும் ரோந்துப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையை சுற்றியும் 3,000 போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், டெல்லி வான்பகுதியில் ட்ரோன்கள், பாராகிளைடர்கள், பலூன்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிநவீன சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செங்கோட்டை வளாகத்தில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Read More : கபாலி, லியோ படத்தின் சாதனையை முறியடித்த கூலி..!! வட அமெரிக்காவில் புதிய சரித்திரம் எழுதிய ரஜினி..!!