ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்குள்ள சிறையில், பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ரபீக் பக்ரி, கரண் குப்தா, பன்வர்லால், அங்கித் பன்சால் ஆகிய 4 கைதிகளை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர்கள் 4 பேரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. அவர்களை, ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த ஓட்டலில் போலீசாரும், கைதிகளும் தனித்தனி அறை எடுத்து ஜாலியாக இருந்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 4 கைதிகளும் அவர்களது மனைவி மற்றும் காதலிகளை வரவழைத்து, உல்லாசமாக இருந்துள்ளனர்.
ரபீக் தனது மனைவியையும், பன்வர் தனது முன்னாள் காதலியையும் ஓட்டலுக்கு வரவழைத்தாராம். இதில், தாதா ரபீக்கின் மனைவி போதைப்பொருளுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தாராம். மற்ற கைதிகளான அங்கித் மற்றும் கரண் ஆகியோர் விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இப்படி உற்சாகத்தில் இருந்த கைதிகள் 4 பேரும், மாலை 5.30 மணிக்குள் சிறைக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இதற்கு போலீசாரே உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த உற்சாக பணிக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரையிலும், சிலருக்கு ரூ.5,000 வரையிலும் கைதிகள் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து 4 கைதிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துச் சென்ற 5 போலீசாரும், உறவினர்கள் உள்பட 13 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபற்றி உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Read More : “மேடை போட்டு என்னை அசிங்கப்படுத்துறாங்க”..!! திமுகவினர் மீது அரக்கோணம் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு..!!