கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த அந்தப் பேராசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் முதலில் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்த நட்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட நாகேஷ்வர், ஆசை வார்த்தைகள் கூறி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவதாக கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, இந்த சம்பவத்தை யாரிடமும் கூற முடியாமல் இரண்டு ஆண்டுகள் வரை தனக்குள்ளேயே மறைத்து வைத்துள்ளார்.
பேராசிரியர் நாகேஷ்வர், மாணவியின் பயத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பேராசிரியரின் தொடர் தொல்லையை தாங்க முடியாமல், அந்த மாணவி இறுதியாகத் தனது பெற்றோரிடம் நடந்த கொடூரங்களை சொல்லி அழுதார்.
மகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி உடனடியாக கேம்ப் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாகச் சம்பந்தப்பட்ட பேராசிரியர் நாகேஷ்வரைக் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.



