இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், ஒரு சிலர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரிலோ அல்லது நிலம் வாங்கியோ முழு நேரம் விவசாயம் செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது காமினி சிங் என்ற பெண் விவசாயியை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், விவசாய விஞ்ஞானி அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார். ஆனால், நான்கு சுவருக்குள் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்வது இவருக்கு பிடிக்கவில்லை. இதனால், விவசாயிகளோடு சேர்ந்து வேலை செய்ய முடிவு செய்தார். மேலும், விவசாயிகளை இயற்கையான முறையில் விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தினார்.
இதுகுறித்து காமினி சிங் கூறுகையில், “கடந்த 2017ஆம் ஆண்டு லக்னோவில் 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் முருங்கை சாகுபடி செய்தேன். முருங்கை எந்த ஒரு சீதோஷண நிலையையும் தாங்கி வளரக்கூடியது. மேலும், அதன் பராமரிப்பும் குறைவு தான். இதனால் மற்ற விவசாயிகளிடமும் முருங்கையை பயிரிட ஊக்கப்படுத்தினேன். அதேசமயம், வழக்கமான விவசாயம் பாதிக்காத வகையில், நிலத்தின் வேலியில் முருங்கையை நடவு செய்ய அறிவுறுத்தினேன்.
இதையடுத்து, விவசாயிகளும் ஆர்வத்தோடு முருங்கையை வேலிப்பயிராக நடவு செய்தனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வரை கூடுதல் வருமானம் கிடைத்தது. இன்றைக்கு எங்களோடு சேர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து முருங்கை இலை, முருங்கைக்காயை நாங்களே கொள்முதல் செய்கிறோம்.
நாங்கள் முருங்கையில் இருந்து ஃபேஸ் க்ரீம், ஆயில், குக்கீஸ், சோப்பு, பவுடர் உள்ளிட்ட 22 வகையான பொருள்களை நாங்களே தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம். இந்த தொழிலை ரூ.9 லட்சம் கடன் வாங்கி ஆரம்பித்தேன். ஆனால், இன்று ஆண்டுக்கு ரூ.1.75 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் 30% எங்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதற்காக Doctor Moringa Pvt Ltd என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
காமினி சிங் ஆலோசனையில் பேரில், முருங்கை விவசாயம் செய்து வரும் அனில் குமார் என்பவர் இதுகுறித்து கூறுகையில், “முதலில் ஒரு ஏக்கர் முருங்கை பயிரிட்டேன். காமினி மேடம் தான் எனக்கு அனைத்து உதவியையும் செய்து கொடுத்தார். ஒரு ஏக்கரில் நல்ல வருமானம் கிடைத்தது. இதனால், தற்போது 17 ஏக்கரில் பயிரிட்டு முருங்கை பயிரிட்டுள்ளேன். நெல், கோதுமையில் வழக்கமாக ரூ.40,000 வருமானம் கிடைக்கும். ஆனால், இப்போது ரூ.1.50 லட்சம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.
Read More : BREAKING | அதிர்ச்சி..!! கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு..!! பீதியில் மக்கள்..!!