மலையாள மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர், சமூக சிந்தனையாளர், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என பன்முகத் திறமை பெற்ற எம்.கே. சானு (வயது 98) காலமானார். வயோதிக காரணங்களால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.
1928 அக்டோபர் 27-ஆம் தேதி ஆலப்புழா மாவட்டத்தில் எம்.சி. கேசவன் – பவானி அம்மா தம்பதிக்கு மகனாக பிறந்த எம்.கே. சானு, மலையாள இலக்கியத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். அவர் 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பல முக்கிய மலையாள இலக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து எழுதியவர் எனப்படும் இவர், “மலையாள மொழியின் சப்தம்” என மலையாள அறிஞர்களால் மதிக்கப்பெற்றிருந்தார்.
சாகித்ய அகாடமி விருது, பவனன் விருது, வயலார் விருது, பத்ம விருது, எழுத்தச்சன் விருது என பல்வேறு விருதுகள் அவருடைய ஆளுமையை அங்கீகரித்துள்ளன. அவருடைய எழுத்தும், பேச்சும் மலையாள சமுதாயத்தில் புதிய சிந்தனையை உருவாக்கியது.
இவரது உடல் இன்று காலை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாலை அவரது உடல் ரவிபுரம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செலுத்தி அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மரணம் மலையாள இலக்கியம் மற்றும் அறிவுத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Read more: புதுவெள்ளம் பெருக்கெடுக்கும் ஆடிப் பெருக்கு!. தாலி மாற்ற உகந்த நேரம் இதுதான்!.