பெருநகர சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு-84(2)-இன் படி, குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரியை செலுத்த தவறினால், நிலுவை தொகைக்கு மாதத்திற்கு 1% தனி வட்டி விதிக்கப்படும். இந்த அபராதத்தை தவிர்க்க, சொத்து உரிமையாளர்கள் உடனடியாக தங்கள் வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியின் அத்தியாவசிய வளர்ச்சி பணிகளான சாலை வசதி, தெருவிளக்கு, குப்பைகள் அகற்றுதல் போன்றவற்றுக்கு இந்த வரி வருவாய்தான் ஆதாரம். எனவே, பொதுமக்கள் உரிய நேரத்தில் தங்கள் வரியை செலுத்தி, நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சொத்து உரிமையாளர்கள் தங்களது வரியை செலுத்த, மாநகராட்சி பல்வேறு எளிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது.
வரி செலுத்த எளிய வழிகள் :
* மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மற்றும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்தலாம்.
* மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம், ‘நம்ம சென்னை’ செயலி, மற்றும் Paytm மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.
* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, UPI மற்றும் RTGS/NEFT சேவைகளையும் பயன்படுத்தலாம்.
* அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்த முடியும்.
* மேலும், 9445061913 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் சொத்து வரி தொடர்பான சேவைகளைப் பெற முடியும்.
* காலக்கெடு நெருங்கிவிட்டதால், கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, உடனடியாக சொத்து வரியைச் செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.