அஸ்பெஸ்டாசிஸ் என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். நீண்ட காலமாக அஸ்பெஸ்டாஸ் இழைகளையும், தூசியையும் சுவாசிப்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இது ஒரு வகையான கனிமம் ஆகும். இது காற்றில் நுட்பமான மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கும் இழைகளாக மாறும். இந்த இழைகள் நுரையீரலுக்குள் நுழையும்போது, அவை நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் தடிப்பையும், வடுவையும் உருவாக்குகின்றன.
இது சுவாசிப்பதை மிகவும் கடினமாக்கி, நாளடைவில் உயிருக்கு ஆபத்தான சூழலை கூட உருவாக்கிவிடும். சில கடுமையான சந்தர்ப்பங்களில், அஸ்பெஸ்டாசிஸ் மரணத்தையும் ஏற்படுத்தலாம். மேலும், அஸ்பெஸ்டாஸ் வெளிப்பாடு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
யாருக்கு இந்த நோய் வரும்..?
கட்டுமானம், உற்பத்தி, சுரங்கம், அரைவை ஆலைகள், வாகன மெக்கானிக் மற்றும் எலெக்ட்ரீஷியன் போன்ற தொழில்களில் ஈடுபடும் நபர்களுக்கு அஸ்பெஸ்டாசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அஸ்பெஸ்டாஸ் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கும், கப்பல் படையில் பணியாற்றியவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
நம் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் அஸ்பெஸ்டாஸுக்கு ஆளாகியிருக்க வாய்ப்புள்ளது. மிகக் குறைந்த அளவிலான அஸ்பெஸ்டாஸ் ஆவது நம் உடலில் இருக்கக்கூடும். இருப்பினும், பெரும்பாலான மக்களுக்கு அஸ்பெஸ்டாஸ் தொடர்பான நோய்கள் வருவதில்லை. ஒருவருக்கு அஸ்பெஸ்டாஸ் நோய் வர வேண்டுமென்றால், அவர் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து அஸ்பெஸ்டாஸை சுவாசித்திருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடங்களில் அஸ்பெஸ்டாஸ் வெளிப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு 1970-களுக்கு முன்பு மிக அதிகமாக இருந்தது. ஆனாலும், இன்றும் கூட அஸ்பெஸ்டாஸ் வெளிப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அஸ்பெஸ்டாஸ் நோயின் அறிகுறிகள் வெளிப்பட நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இப்போதும் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
அஸ்பெஸ்டாசிஸ் நோயின் அறிகுறிகள் என்ன..?
அஸ்பெஸ்டாசிஸ் நோயின் முதல் அறிகுறி, கடினமாக வேலை செய்யும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போதோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதுதான். இது தவிர, வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்.
* மார்பில் வலி மற்றும் இறுக்கம்
* விரல் நகங்கள் வீங்கி, வளைந்து காணப்படுதல்
* தொடர்ந்து இருமல்
* காரணமில்லாமல் உடல் எடை குறைதல்
* அதிக சோர்வு மற்றும் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை
* மூச்சு உள்ளிழுக்கும்போது ஒருவித சத்தம் வருவது
இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
வைரல் வீடியோ..
தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், வீடுகளில் பயன்படுத்தப்படும் கூரைகள் மூலம் ஆஸ்பெஸ்டாஸ் நோய் பரவுவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், சிலர் வீட்டு கூரைகளுக்கு சிமெண்ட் அட்டைகளை பயன்படுத்தியிருப்போம். அதை மீண்டும் மாற்றும்போது, அதிலிருந்து வெளியேறும் துகள்களை சுவாசிக்கக் கூடும். ஆனால், அதை சுவாசிக்கும்போது, அந்த துகள்கள் நுரையீரலில் தங்கி, நாளடைவில் ஆஸ்பெஸ்டாஸ் நோய் வர காரணமாக அமைகிறது. இது புற்றுநோயை உண்டாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read More : அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு கப் போதும்..!! சங்குப்பூ தேநீர் குடிப்பதால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!!