இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பிக்கைக்குரிய நாயகராக இருந்த சேதேஷ்வர் புஜாரா, இன்று (ஆகஸ்ட் 25) அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த புஜாரா, கடந்த சில காலமாக அணியில் இடம் பெறவில்லை. பிசிசிஐ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை முன்னிலைப்படுத்தி, புஜாராவை அணிக்கு தேர்வு செய்யவில்லை. 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அவர் கடைசியாக இந்தியா அணிக்காக விளையாடினார்.
இந்தத் தொடருக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் 2025-இல் நடைபெற்ற இந்தியாவின் டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு புஜாரா திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தேர்வாளர்கள் அனுபவம் குறைந்த வீரர்களையே தேர்வு செய்தனர். இந்த சுற்றுப்பயணம் இந்தியாவுக்குக்கு மோசமாக முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூத்த வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள புஜாரா, “இந்திய ஜெர்சியை அணிவது, தேசிய கீதத்தை பாடுவது, ஒவ்வொரு முறை மைதானத்தில் இறங்கும் போது என் முழு முயற்சியையும் கொடுப்பது இதெல்லாம் எனக்கென்ன அர்த்தமென்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவுள்ளது என்பதுபோல, நன்றி மனப்பான்மையுடன் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.