ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்கதேசத்தினரை நள்ளிரவில் க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை உள்ள நிலையில் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பிரிவுகளின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணியில் சேருபவர்களில் பலர் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றிவந்த 70 பேரை போலீஸார் கண்டறிந்து கைது செய்தனர்.
இந்த நிலையில் ஓசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்கதேசத்தினரை நள்ளிரவில் க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூர் அடுத்த ஆலப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் தங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது. உங்கள் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் போலீசாரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.