தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்த பால்ராஜ் (48) என்பவர் “ரேபிடோ” (Rapido) நிறுவனத்தில் பைக் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதேபோல், திருப்பூர் மாவட்டம் தசாவர் நாயக்கர்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (22) என்ற இளைஞர் கிழக்கு தாம்பரம் பகுதியில் தங்கியிருந்தார். இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.40 மணியளவில் ரேபிடோ ஓட்டுநர் பால்ராஜ், தனது இரு சக்கர வாகனத்தில் பாலமுருகனை ஏற்றிச் சென்றுள்ளர். குரோம்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் வேகமாக கார் ஒன்று வந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய அந்த கார், நிற்காமல் சென்றுவிட்டது. இந்த பயங்கர விபத்தில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக் டாக்சி ஓட்டுநர் பால்ராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பால்ராஜை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிளை போலீசார் ஆய்வு செய்தபோது, விபத்தின் நிகழ்ந்த சமயத்தில், இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவருமே தலைக்கவசம் அணிந்து தான் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த ஓட்டுநர் பால்ராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலையும், ரேபிடோ வாடிக்கையாளரான பாலமுருகன் உடலையும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : சொந்தமா தொழில் தொடங்க ஆசையா..? தற்போதைய டிரெண்டிங் பிசினஸ் எது..? வருமானம் அள்ளலாம்..!!